டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் கட்டாயம் அறிவிப்பை வரவேற்கிறோம், ஆனால் இந்த ஆண்டு வேண்டாம் - மாணவர்கள் கருத்து !!
மயிலாடுதுறை உள்ள நகராட்சி நூலகத்தில் ஓய்வுபெற்ற பேராசிரியர் எஸ்.சிவராமன் முயற்சியால் தன்னார்வ பயிலும் வட்டம் உருவாக்கப்பட்டு, இதுவரை 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் இங்கு பயிற்சி பெற்றுள்ளனர். கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் இங்கு படித்த 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். தற்போது இந்நூலகத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்படும் குரூப் 1, குரூப் 2, குரூப் 4 உள்ளிட்ட 12 வகையான போட்டித் தேர்வுகளுக்காக 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
இங்கு குரூப் தேர்வுக்கு படிக்கும் பெரும்பாலான மாணவர்கள் அரசின் 'குரூப் தேர்வுக்கு தமிழ் கட்டாயம்" என்ற அரசின் அறிவிப்பு தங்களுக்கு ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ளனர். இத்திட்டத்துக்கு வரவேற்பு தெரிவித்துள்ள கல்வியாளர்களும் அடுத்த ஆண்டு முதல் இத்திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
அவற்றில் குரூப் தேர்வுகளுக்கு தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு மகிழ்ச்சி. குரூப் 1 தேர்வு 2023-ஆம் ஆண்டுதான் நடைபெற உள்ளதால், தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு குரூப் 1 தேர்வினை எழுதவுள்ள மாணவர்கள் எளிதில் தயாராகி விடுவார்கள். ஆனால் விரைவில் குரூப் 2 தேர்வு நடைபெற உள்ள நிலையில் அத்தேர்வினை எழுதவுள்ள மாணவர்கள் ஏற்கெனவே பொது அறிவு கேள்விகளுக்கு 175 மதிப்பெண்களுக்கும், ஆப்டிடியூட்க்கு 25 மதிப்பெண்களுக்கும் படித்து தயாராகி உள்ளார்கள்.
தற்போது தமிழ் கட்டாயம் என்ற அறிவிப்பினை மாணவர்கள் ஏற்று கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். எனவே 2019-இல் அரசு அறிவித்தபடி நிகழாண்டு மட்டும் தேர்வினை நடத்தவும், அடுத்த ஆண்டு முதல் தமிழை கட்டாயமாக்கலாம் என்றும் கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து, குரூப் 2 தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர் அஜித்குமார் கூறுகையில், 2019 பாடத்திட்டத்தின்படி ஏற்கெனவே இருந்த தமிழை நீக்கிவிட்டு, முழுவதுமாக பொது அறிவு கேள்விகளை அறிவித்திருந்தனர். அதனால் முழுவதுமாகவே பொது அறிவுக் கேள்விகளில் கவனம் செலுத்தியுள்ளோம். எனவே, அரசின் தற்போதைய அறிவிப்பை அடுத்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதுகுறித்து, குரூப் 4 தேர்வுக்கு ஆங்கில வழியில் படித்து தயாராகி வரும் மாணவி பார்கவி கூறுகையில், நான் கடந்த 2 ஆண்டுகளாக பொது ஆங்கிலம் படித்து தயாராகியுள்ள நிலையில் தற்போது குரூப் 4 தேர்வில் பொது ஆங்கிலம் நீக்கப்பட்டுள்ளது. விரைவில் தேர்வு வரவுள்ள நிலையில், மீண்டும் தமிழில் படிக்க காலக்கெடு இல்லை. எனவே, இந்த ஆண்டுக்கு ஏற்கெனவே இருந்த பாடத்திட்டத்தையே மீண்டும் அறிவிக்க வேண்டும். பொது ஆங்கிலம் படித்த மாணவர்களின் நிலையை அரசு பரிசீலிக்க வேண்டும் என்றார்.
Leave Comments
Post a Comment