எழுதி வையுங்கள்... இலக்குகளை!
எழுதி வையுங்கள்... இலக்குகளை!
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதிர்காலத்தைப் பற்றிய ஒரு கனவு இருக்கும். ஆனால், கனவு காணும் அனைவரும், இலக்கை அடைந்து வெற்றிக் கனியை ருசிப்பதில்லை. வெகு சிலர் மட்டுமே தோல்வியடைந்தாலும் அந்தக் கனவைத் துரத்த தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வெற்றி காண்கிறார்கள்.
இலக்கை அடைய எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது ஒரு மோசமான இயலாமைத்தனமாகும். சூழ்நிலைகளைக் கடந்து உழைத்தால்தான் வெற்றி என்பது எட்டும் தூரத்திற்கு வரும்.
அந்த வகையில் கனவுகள் அவ்வப்போது வந்துவிட்டுச் செல்லும். திடீரென யோசித்துக் கொண்டிருக்கும் போது மனதில் உங்களுடைய இலக்குகளைப் பற்றிய எண்ணம் தோன்றலாம். அடுத்த சில நிமிடங்களில் அது மறந்தும் போகலாம்.
எனவே உங்களுடைய இலக்குகளைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைத்தால் நீங்கள் அதை எழுதி வைக்க வேண்டியது அவசியம்.
உங்களை நீங்களே ஊக்கப்படுத்துவதற்கான ஒரு சிறந்த வழி இலக்குகளை அவ்வப்போது கண்ணில் படுமாறு எழுதி வைப்பது. அதிலும் குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவேற்ற வேண்டும் என்ற காலக்கெடுவுடன் எழுதி வைக்கும்போது இலக்கை அடைய அது ஓர் உந்துதலை தொடர்ந்து உங்களுக்கு ஏற்படுத்தும்.
இலக்குகளை அடைய ஒரு தூண்டுதல்: வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த காலத்தில் நேற்று நடந்தவற்றைக் கூட யோசிக்க நேரமில்லாத நிலையில்இருக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் மனதில் ஆயிரக்கணக்கான எண்ணங்கள் தோன்றி மறைவதால் அவை அத்தனையையும் ஒருபோதும் நினைவுபடுத்திப் பார்ப்பது
என்பது இயலாத காரியம்.
அதனால் மனதில் தோன்றிய முக்கியமானவற்றை - நாம் செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவற்றை - எழுதி வைக்க வேண்டும். அப்போதுதான் நாம் இலக்கை அடைய வேண்டும் என்ற தூண்டுதலைப் பெற முடியும்.
கணினிமயமான எழுத்து: ஒரு காலத்தில் அனைத்துமே பேப்பர், பேனா என்றிருந்த நிலை மாறி இன்று எழுத்துகள் கூட கணினிமயமாகிவிட்டன.
கணினியில் நோட்பேடில் குறிப்பு எடுத்துக் கொள்ளும் பழக்கம் பலருக்கும் இருக்கிறது. ஆனால், கணினியில் குறிப்பு எடுப்பதற்கும் ஒரு நோட்டில் கையால் எழுதுவதற்கும் கூட உளவியல்ரீதியாக வேறுபாடுகள் இருக்
கின்றன. கையால் எழுதுவது மனதில் அழுத்தமாகப் பதிவாகிறது என்பதை பல ஆய்வுகள் உறுதி செய்திருக்கின்றன. டைரியிலோ அல்லது வெள்ளைத் தாளிலோ எழுதி வையுங்கள். தாளில் எழுதியதை உங்கள்கண்ணில் அடிக்கடி படும் இடத்தில் ஒட்டி வைத்தால், இலக்குகள் உங்களுக்கு நினைவுபடுத்தப்படும்.
இலக்குகள் உங்களைத் துரத்தத் தொடங்கும்.
எழுதுவதால் என்ன பயன்: உங்கள் இலக்குகளை எழுதுவது, உங்களுக்கு என்ன தேவை, எதை அடைய விரும்புகிறீர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. இலக்கை அடையச் செய்ய வேண்டிய தினசரி நடவடிக்கைகளை நெறிப்படுத்துகிறது.
காலையில் உங்கள் இலக்குகளை எழுதுவதற்கும், இரவில் அவற்றை மறுபரிசீலனை செய்வதற்கும் நேரம் ஒதுக்கினாலே போதும், இலக்கினை எழுதுவதன்அவசியத்தை நீங்கள் உணர முடியும்.
முடிந்தால் இலக்குகளைப் பட்டியலிட்டு அவற்றை எழுதி அடிக்கடி உங்கள் கண்களில் படுமாறு ஒட்டி வைத்துக் கொள்ளுங்கள். எதிர்காலத்தில் நீங்கள் எப்படி இருக்கப் போகிறீர்கள் என்பதை எழுதி வைத்துள்ள இலக்குகள் அடிக்கடி உங்களுக்கு நினைவுபடுத்தும்.
அதுபோல குறிப்பிட்ட இலக்கு நிறைவுற்றவுடன் கண்டிப்பாக அதையும் குறித்து வையுங்கள். உங்களுடைய தனிப்பட்ட மதிப்பீட்டுக்குக் கூட இது மிகவும் உதவும். இலக்குகளை நம்மால் அடைய முடியும் என்ற நம்பிக்கையை அது ஏற்படுத்தும்.
இலக்குகளை அடைவதற்கான செயல்திட்டங்களை எழுதி வைப்பது, அவற்றை நடைமுறைப்படுத்த முயற்சி செய்வது, முயற்சியில் ஏற்பட்ட வெற்றி, தோல்விகளை எழுதி வைப்பது எல்லாமும், இலக்கை நோக்கிய பயணத்தில் நீங்கள் முன்னேறிச் செல்ல உதவும்.
ஒவ்வொன்றையும் எழுதி வைப்பதன் மூலம் முந்தையை தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளலாம்.
இலக்கை நோக்கி கவனத்தைக் குவித்தல்: இலக்குகளை எழுதி வைப்பது, இலக்குகளை நிறைவேற்றநீங்கள் செய்ய வேண்டியவற்றை நோக்கி உங்களைத் தள்ளுகிறது. அதனால் தேவையில்லாத விஷயங்களில் உங்களுடைய கவனம் செல்வதில்லை. ஏன், உங்களுக்குத் தேவையில்லாதவர்களை உங்களிடம் இருந்து விலக்குகிறது. இதனால் குறிப்பிட்ட காலத்தில் நீங்கள் நினைத்த செயல்களைச் செய்ய முடியும்.
தன்னம்பிக்கை: இலக்குகளை எழுதிவைக்கும்போது உங்களுக்கு மற்றவர்களின் ஊக்கப்படுத்தும் வார்த்தைகள் தேவைப்படாது. நீங்கள் எழுதியதை அடிக்கடி பார்த்தாலே போதுமானது. தன்னம்பிக்கை தானாகவே கிடைக்கும்.
திட்டமிடல்: இலக்கை மட்டும் எழுதிவைக்காமல் அதுசார்ந்த தினசரி நடவடிக்கைகளையும் நாளையநடவடிக்கைகளையும் திட்டமிட்டு எழுத வேண்டும். நாளின் முடிவில் எவ்வளவு முடித்துள்ளீர்கள் என்பதை கணக்கிடுங்கள். இது உங்களின் அடுத்த திட்டமிடலுக்கு பெரிதும் உதவும்.
திட்டமிட்ட வெற்றி: இலக்குகளுக்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்போது நீங்கள் அந்த குறிப்பிட்ட காலத்துக்குள் நிறைவேற்ற உந்தப்படுவீர்கள். இதனால் திட்டமிட்ட காலத்தில் வெற்றியைப் பெற முடியும்.
அடுத்த இலக்கு: ஓர் இலக்கினை எழுதி திட்டமிட்டு செயல்படுத்தி அது நிறைவுறும்போது கிடைக்கும் தன்னம்பிக்கையில் அடுத்த இலக்குக்கு அது உங்களைத் தயார்படுத்தும் என்பது நிச்சயம்.
ஒவ்வொருவரும் வாழ்வில் வெற்றி பெற தங்களின் முன்னேற்றத்தை அளவிடுவதும் கொண்டாடுவதும் முக்கியம். வெற்றி காணுங்கள், கொண்டாடுங்கள்!
தினமணி.
Leave Comments
Post a Comment