வன்னியர்களுக்கான உள்ஒதுக்கீடு ரத்து மேல்முறையீடு - உச்சநீதிமன்றம் உத்தரவு.
வன்னியர்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், உள்ஒதுக்கீடு ரத்துக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கி கடந்த அதிமுக ஆட்சியில் சட்டம் இயற்றப்பட்டது. இது தொடர்பான அரசாணையை ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் திமுக தலைமையிலான அரசு வெளியிட்டது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை உயர்நீதிமன்ற மதுரை கிளை விசாரித்தது. அப்போது, சாதி வாரியான கணக்கெடுப்பை முறையாக நடத்திய பின்னரே இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் எனக் கூறி வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள் ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று (டிச.,16) விசாரணைக்கு வந்தது. அப்போது, வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டின்படி ஏற்கனவே நடந்த மாணவர் சேர்க்கை, பணி நியமனங்களில் மாற்றம் செய்யக்கூடாது என்றும், அடுத்த உத்தரவு வரும் வரை மாணவர் சேர்க்கையோ, பணி நியமனங்களோ செய்யக்கூடாது என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவு தொடர்கிறது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15, 16 தேதிகளில் நடைபெறும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Leave Comments
Post a Comment