Ads Right Header

வரலாற்றில் இன்று டிசம்பர் 25!

 



டிசம்பர் 25:- ஆங்கில அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய வீரமங்கை வேலு நாச்சியார் நினைவு தினம் இன்று


கிறித்தவம் திணித்த ஆங்கிலேயரை… ஆயுதமேந்தி எதிர்த்த தமிழ் மண்ணின் வீரமங்கை… வேலு நாச்சியார்!


ராமநாதபுரம் மன்னர் செல்லமுத்து சேதுபதி – முத்தாத்தாள் தம்பதிக்கு பெண் வாரிசாக 1730ஆம் ஆண்டு சக்கந்தியில் பிறந்தவர். ஆண்வாரிசு இல்லை என்ற குறை தோன்றாமல், ஆண் பிள்ளைக்கு நிகராக சுதந்திரம் கொடுத்து, போர்க் கலையுடன் ஆயுதப் பயிற்சி அளித்து வீராங்கனையாகவே வளர்த்தார் செல்லமுத்து சேதுபதி.


தைரியம் வீரம் செறிந்து வளர்ந்த வேலுநாச்சியார் இள வயதில் மட்டுமல்ல இறக்கும் வரையிலும் பயம் என்ற சொல்லுக்குப் பொருள் தெரியாமலேயே வாழ்ந்தவர்! சக பெண்கள் எல்லாம் பல்லாங்குழியும் அம்மானையும் ஆடியபோது, வேலுநாச்சியாரோ வாள் வீச்சு, கத்தி வீச்சு, வில்வித்தை, ஈட்டி எறிதல், குதிரையேற்றம் யானை ஏற்றம் என போர்க் கருவிகளுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.


ராமாயண மகாபாரத இதிகாச காவியங்களுடன் சம்ஸ்க்ருதமும் உபநிஷதங்களும் அத்துபடி ஆனது. ஆங்கிலம் உருது என மேலும் ஏழு மொழிகளும் அவருக்கு பயிற்றுவிக்கப் பட்டன. வேலுநாச்சியாரின் அழகிலும் வீரத்திலும் அறிவிலும் மயங்கிய சிவகங்கை மன்னர் முத்து வடுகநாதர், அவரை மணம் முடிக்கக் கேட்டார். திருமணம் இனிதே நடந்தது. அதன்பின் வேலுநாச்சியார் சத்கந்தியை விட்டு சிவகங்கை சென்றார். சிவகங்கைச் சீமையின் பட்டத்து ராணியாக சுடர் விட்டார்.


இல்லற வாழ்க்கை இனிதாக, மிகச் சிறப்புடன் வேலுநாச்சியாரும் முத்துவடுகநாதரும் சிவகங்கை சீமையை ஆட்சி புரிந்து வந்தனர். அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். வெள்ளை நாச்சியார் என்று பெயர் சூட்டினர். சிவகங்கைச் சீமையின் நல்லாட்சிக்கு பிராதானி தாண்டவராயப் பிள்ளையும், மருது சகோதரர்களும் பக்க பலமாய் இருந்தனர்.


வேலு நாச்சியாரின் இளமைப் பருவத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவம். காட்டுப் பகுதியில் சக தோழியருடன் விளையாடிக் கொண்டிருந்தார் வேலு நாச்சியார். அப்போது தொலைவில் புலி ஒன்று மானை துரத்திச் சென்றது. அதைக் கண்டு அதிர்ந்த வேலு நாச்சியார், தன் குத்துவாளை வீசி எறிய, ஓடிக் கொண்டிருந்த புலியின் காலில் செறுகி நின்றது. காயம்பட்ட புலி நின்றது. மான் வெகுதூரம் தப்பித்து ஓடியது. அரண்மனை திரும்பியதும் தந்தையிடம் சொன்னார் வேலுநாச்சியார். தந்தையோ, நீதி சொன்னார். ‘உன் குறுவாள் வீச்சின் திறன் பெருமையாக உள்ளது. ஆனால் உணவுச் சங்கிலியில் புலிக்கு மான் இரையாவதும் மானுக்கு புல் இரையாவதும் இயற்கையின் நியதி. அதைத் தடுக்க நாம் யார். உன்னால் மான் காப்பாற்றப் பட்டிருக்கலாம்; ஆனால் புலியின் உணவுக்கு அல்லவா நீ அநீதி இழைத்திருக்கிறாய்?’ என்றார்.


அதற்கு வேலுநாச்சியார், ‘இது முறையல்ல தந்தையே! புலிக்கு உணவு வேண்டுமெனில் இறந்த மானை சாப்பிடட்டும். ஏன் ஓடுகின்ற மானை துரத்தி அடிக்கிறது? என் கண் முன் வேறு உயிர் பாதிக்கப்படுவதை என்னால் சகித்திருக்க முடியாது’ என்றார். இப்படி எண்ணம் கொண்டிருந்தவர்தான் பின்னாளில் ஆங்கிலேய காலனி ஆட்சிக்கு எதிராக தம் மக்களைக் காக்க வீர வாள் எடுத்தார்.


கிழக்கிந்திய கம்பெனியாரின் ஆதிக்கம் தென்னகத்தில் பரவியது. முத்து வடுகநாதர் தன் ஆட்சியை காலனி ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர மறுத்தார். ஆற்காடு நவாபுக்கு கப்பம் கட்டவுமில்லை. கப்பம் கேட்டு வந்த சிப்பாய்களை வெளியேற்றினார். நவாபும் கம்பெனியாரும் முத்துவடுக நாதரை வீழ்த்த நேரம் பார்த்தனர்.


வடுகநாதர் வழிபாட்டுக்காக காளையார் கோயில் செல்லும் போது, அவரைக் கொல்ல திட்டம் தீட்டினான் நவாப். நவீன ஆயுதங்களுடன் வடுகநாதர் எதிர்பாராத நேரத்தில் கோரமாகத் தாக்கிக் கொன்றனர். கணவன் இறந்த செய்தி கேட்டு துடித்தார் வேலுநாச்சியார். கணவன் உடலை பார்க்க காளையார் கோயில் நோக்கி குதிரையில் சென்றார். அவரையும் கொல்ல நவாபின் படை காத்திருந்தது. ஆனால் கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க விரைந்த வேலுநாச்சியாரின் ஆவேசத்தின் முன் அப்படைகள் வலுவிழந்தன.


கண் முன்னே கணவன் சடலம் குண்டடி பட்டு சிதைந்து கிடந்தது. அருகில் இளைய ராணி கௌரி நாச்சியாரும் வெட்டுண்டு கிடந்தார். கணவன் சிதையில் தானும் வீழ்ந்து உடன்கட்டை ஏற எண்ணிய வேலுநாச்சியாரின் மனத்தில் பழிவாங்கும் எண்ணம் மேலோங்கியது. கணவனைக் கொன்றவர்களைப் பழி தீர்க்க சபதம் பூண்டார். மருது சகோதரர்களின் உதவியுடன் திண்டுக்கல் சென்றார் வேலு நாச்சியார். அரசனும் அரசியும் இல்லாத சிவகங்கையை நவாபும் கம்பெனியாரும் கைப்பற்றிக் கொண்டனர்.


வேலுநாச்சியாரின் மனம் கணக்கு போட்டது. நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பொதுவான எதிரி ஹைதர் அலி. அவரிடம் உதவி கேட்க முடிவெடுத்தார். அப்போது ஹைதர் அலி திண்டுக்கல்லில் இருந்தார். ஹைதர் அலியிடம் உருதுவில் பேசிய வேலுநாச்சியாரைக் கண்டு ஆச்சரியம் அடைந்த ஹைதர் அலி, அவருக்கு உதவ முன்வந்தார்.


வேலுநாச்சியார் விருப்பாட்சி, திண்டுக்கல் கோட்டைகளில் பாதுகாப்பாக தங்கி படைகளைத் திரட்டத் தொடங்கினார். போர் புரியும் உத்திகளையும், படைப் பிரிவுகளையும் மருது சகோதரர்கள் உதவியில் அங்கிருந்தபடியே ஏற்படுத்தி ஆங்கிலேயரையும் நவாபையும் தாக்க திட்டம் தீட்டினார். அவரின் லட்சியம் தங்கள் சிவகங்கைக் கோட்டையில் அனுமன் கொடியைப் பறக்க விடுவதுதான்!


திரட்டிய படைகளை ‘சிவகங்கை பிரிவு’, ‘திருப்புத்தூர் பிரிவு’ ‘காளையார் கோயில் பிரிவு” என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்தார். சிவகங்கைப் பிரிவிற்கு தனது தலைமையிலும், திருப்புத்தூர் பிரிவுக்கு நள்ளியம்பலம் தலைமையிலும், காளையார் கோயில் பிரிவுக்கு மருது சகோதரர்கள் தலைமையிலும் படைகளைப் பிரித்து அனுப்பினார். அரண்மனையில் விஜயதசமி விழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும். ஆங்கிலேயப் படை வெளியில் காவல் காக்க நாவாப் கோட்டைக்குள் இருந்தான். விழாவிற்கு செல்லும் பெண்கள் கூட்டத்துடன் வேலுநாச்சியாரும் அவரது பெண் படைப் பிரிவும் மாறுவேடத்தில் ஆயுதங்களை மறைத்து வைத்து திடீர் தாக்குதல் நடத்தினர். வேலுநாச்சியாரின் படையில் குயிலி என்ற பெண், தன் உடலில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து முதல் மனித ஆயுதமாக வரலாற்றில் இடம்பிடித்தாள்.


உடையாள் எனும் வீராங்கனை வேலுநாச்சியார் எங்கிருக்கிறார் எனக் கேட்டு ஆங்கிலேயப் படைகள் பலவாறு துன்புறுத்திய போதும் பதில் கூறாமல் உயிர் நீத்தாள். அதற்காகவே, உடையாளுக்கு வீரக்கல் ஒன்றை நட்டு, தனது திருமாங்கல்யத்தையே முதல் காணிக்கையாகச் செலுத்தி வீரஅஞ்சலி செலுத்தினார் வேலுநாச்சியார். (இது கொல்லங்குடி வெட்டையார் ‘காளியம்மாள்’ என்று இன்றும் ஒரு கோயிலாக விளங்குகிறது)


1780ல் வேலுநாச்சியார் தலைமையில் பெரும் படை திண்டுக்கல்லில் இருந்து சிவகங்கை நோக்கிப் புறப்பட்டு, கடும் போர் புரிந்து காளையர் கோவிலை மீட்டது. வேலுநாச்சியார் தன் ஐம்பதாவது வயதில், கணவரைப் படுகொலை செய்த ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்து எடுத்த சபதத்தை நிறைவேற்றி சிவகங்கை ராணியானார். சிவகங்கை கோட்டையில் பறந்த ஆங்கிலேயர் கொடி இறக்கப்பட்டு அனுமன் கொடி ஏறியது.


அடுத்தடுத்து சிவகங்கை சீர் கண்டது. படையெடுப்பால் சீரழிந்த கோட்டைகள் உறுதியாயின. குளங்கள் ஆறுகள் வெட்டப்பட்டு தூர் வாரி நீர்வளம் மேம்பட்டது. துணைக் கால்வாய்களால் பாசனம் விரிவானது; விவசாயம் செழிக்க மக்கள் மகிழ்ச்சி கூடியது! பின்னாளின் தம் மகள் மரணத்தால் மனமுடைந்த வேலு நாச்சியார் இதய நோயாளி ஆனார். தன் கடைசிக் காலத்தை விருப்பாட்சி அரண்மனையிலேயே கழித்த அவர், டிசம்பர் 25, 1796ல் காலமானார்.


இந்தியாவின் முதல் சுதந்திரப் போராட்டமாக வர்ணிக்கப்படும் ஜான்சி ராணியின் வீரம் வெளிப்படும் ஒரு நூற்றாண்டு முன்னரே தமிழ் மங்கை வேலு நாச்சியார் ஆங்கிலேயரை சிதறடித்தவர். அப்போதே தன் நாட்டை மீட்க சுதந்திரப் போரைத் துவங்கிவிட்டார். ஆங்கில ஆதிக்கத்துக்கு எதிராகப் போர் புரிந்த முதல் பெண் போராளியாக சரித்திரத்தில் இடம் பெற்றார்.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY