2022ல் குரூப் 2, குரூப் 4 பிரிவில் 11 ஆயிரம் பேருக்கு வேலை - முழு விபரம்!
2022ல் குரூப் 2, குரூப் 4 பிரிவில் 11 ஆயிரம் பேருக்கு வேலை: தமிழ் தகுதி தேர்வு கட்டாயம்; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வரும் ஆண்டில் குரூப்-2, 2ஏ மற்றும் குரூப்-4 பிரிவில் 11,088 காலிப்பணியிடங்களை நிரப்புவதாக அறிவித்துள்ளது. இதில் தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழக அரசு துறைகளில் குரூப் 1, குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப் 4 உள்ளிட்ட பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பி வருகிறது. ஓராண்டில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன தேர்வுகள் நடத்தப்படும், அதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் ஆகிய விவரங்கள் அடங்கிய ஓராண்டு தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
இது தேர்வர்கள் முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற்கு உதவியாக இருந்து வருகிறது. அதன்படி, வரும் 2022-ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அது மட்டுமல்லாமல் டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்படும் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது. கடந்த அதிமுக ஆட்சியில் மின்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் அதிக அளவில் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் பணியில் சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து முதல்வராக பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின் அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தமிழ் மொழி கட்டாயமாக்கப்படும் என்று அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இந்த நிலையில் 2022ம் ஆண்டுக்கான ஓராண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடும் நிகழ்ச்சி சென்னை பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடந்தது. டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் 2022ம் ஆண்டுக்கான கால அட்டவணையை வெளியிட்டார்.
தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தலைவர் பாலச்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: டிஎன்பிஎஸ்சி 2022ம் ஆண்டில் 32 துறைகளுக்கான தேர்வுகளை நடத்த உள்ளது. ஏற்கனவே குரூப்-2, 2ஏ, 4 தேர்வுகளுக்கான அறிவிப்பு இந்த ஆண்டு ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் வெளியாகி இருக்க வேண்டியது. கொரோனா தொற்றால் அது ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி, குரூப்-2, 2ஏ(நேர்முக தேர்வு அல்லாத பதவி) பணிகளில் 5,831 காலி இடங்கள் இருக்கின்றன. இந்த இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வருகிற பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியானதில் இருந்து 75 நாட்களில் தேர்வுகள் நடைபெறும். குரூப்-4 பணிகளில் 5,255 காலி பணியிடங்கள் உள்ளது.
இந்த தேர்வுக்கான அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். அறிவிப்பு வெளியான நாளில் இருந்து 75 நாட்களுக்குள் தேர்வு நடத்தப்படும். இந்த காலி இடங்கள் என்பது இப்போதைய நிலவரம் தான். வரும் நாட்களில் இந்த இடங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போதைய அரசின் அறிவிப்பின்படி, புதிய நடைமுறையில் நடக்க உள்ள தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இன்னும் ஒரு வாரத்தில் தயாராகி விடும். அதனைத் தொடர்ந்து மாதிரி வினாத்தாள்களும் வெளியிடப்படும். அண்மையில் நடந்த குரூப்-1 பணிகளுக்கான முதன்மை தேர்வு மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.
குரூப்-1 பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடத்த திட்டமிட்டுள்ளோம். அரசின் அறிவிப்பின்படி, புதிய நடைமுறையில் நடைபெற உள்ள தேர்வுக்கான பாடத்திட்டங்கள் இன்னும் ஒருவாரத்தில் தயாராகி விடும். அதனைத் தொடர்ந்து தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக மாதிரி வினாத்தாள்கள் வெளியிடப்படும். தமிழக அரசு தமிழ்மொழித் தாள் தேர்ச்சி கட்டாயம் என்று அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அதனை பின்பற்றியே இனி வரக்கூடிய தேர்வுகள் நடத்தப்படும். அதன்படி, குரூப்-4 பதவிகளை பொறுத்தவரையில், ‘பகுதி-அ’ பிரிவில் 150 மதிப்பெண்ணுக்கு தமிழ்மொழி தகுதித்தாள் தேர்வாக இருக்கும். அதில் 40 மதிப்பெண் பெற்றால் மட்டுமே, ‘பகுதி-ஆ’ தேர்வுத்தாள் (பொது அறிவு) திருத்தப்படும். இந்த 2 மதிப்பெண்களும் தரவரிசை மதிப்பெண்ணாக கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
குரூப்-4 தேர்வு தமிழ் மொழித்தாள் கொள்குறிவகையிலும், குரூப்-1 மற்றும் குரூப்-2 தேர்வு தமிழ்மொழித்தாள் விளக்க வகையிலும் நடக்கும். விடைத்தாள்கள் அனைத்தும் ஸ்கேன் செய்து டிஜிட்டல் முறையில் திருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யார், யார் எந்த இடத்தில் தேர்வு எழுதுகிறார்கள் என்ற விவரம் வரை ஹால் அமைப்பு உருவாக்கப்படும். ஒன் டைம் ரிஜிஸ்ட்ரேஷனுக்கு ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஓ.எம்.ஆர். விடைத்தாளுக்கு மாற்று ஏற்பாடாக கணினி வழியிலான தேர்வு நடத்த திட்டமிட்டு வருகிறோம்.
அதன்படி, 1.30 லட்சம் பேர் பங்கேற்ற அரசு துறை சார்ந்த தேர்வுகள் கணினி வழித்தேர்வாக நடத்தப்பட்டது. மற்ற தேர்வுகளையும் அதேபோல் நடத்த திட்டமிட்டுள்ளோம். தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதற்கு முன்னர் இறுதி விடைக்குறிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு தற்போது வரையில் டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்புகளுக்கு செல்லாது. சமீபத்தில் 2 தேர்வுகள் நடந்து முடிந்துள்ளன. அந்த தேர்வுகளையும் இதே முறையை பின்பற்றி விடைத்தாள் திருத்த அறிவுறுத்தியிருக்கிறோம். உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் அடிப்படையில் அடுத்தகட்டமாக முடிவு செய்யப்படும். ஆவின் நிறுவனம் டி.என்.பி.எஸ்.சி.யிடம் தேர்வு நடத்த கேட்டு இருக்கிறது. அது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் கிரண்குராலா மற்றும் டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.
2022ல் நடத்தப்படும்
தேர்வுகள் விவரம்
தேர்வு விவரம் அறிவிக்கும் மாதம்
குரூப்-2,2ஏ பிப்ரவரி
குரூப்-4 மார்ச்
ஒருங்கிணைந்த இன்ஜினீயரிங் மார்ச்
சிவில் நீதிபதி மே
குரூப்-1 ஜூன்
மாவட்ட கல்வி அதிகாரி செப்டம்பர்
* முறைகேடு தடுக்க ஏற்பாடு
டி.என்.பி.எஸ்சி தலைவர் பாலச்சந்திரன் கூறுகையில், தேர்வில் முறைகேடுகள் நடப்பதை தடுக்கும் வகையில் தேர்வு முடிந்ததும் ஒவ்வொரு மையங்களிலும் நடந்த தேர்வுக்கான விடைத்தாள்கள் அனைத்தும் பாதுகாப்பான பாக்ஸில் வைத்து லாக் செய்யப்படும். பின்னர் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட லாரியில் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்திற்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டுவரப்படும். ஒன்டைம் என்ற அடிப்படையில் உள்ள அந்த லாக்கை டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தவிர வேறு யாரும் திறக்க முடியாது. இதற்கு முன்னர் தேர்வுகளில் நடைபெற்ற முறைகேடுகளை முழுமையாக அறிந்து அதன் அடிப்படையில் ஓ.எம்.ஆர். ஷீட்டுகளில் பல்வேறு புதிய முறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
தேர்வர்களின் விவரங்கள் அடங்கிய தொகுப்பானது தேர்வு மையங்களிலேயே தனியாக பிரிக்கப்பட்டு, தேர்வு விடைத்தாள் மட்டுமே தனியாக வேறொரு கவர்களில் வைக்கப்படும். யாராவது வழியிலேயே ஓ.எம்.ஆர்., ஷீட்டுகளை மாற்றி திருத்த முடியாது. இதற்கு முன்னர் ஓ.எம்.ஆர்., ஷீட்களின் பட்டியலின் மேற்பகுதியில் உள்ள விவரங்கள் ஷீட்களின் ஓரப்பகுதியில் கொண்டு வரப்பட்டு, அதை கிழித்து வைக்கும்படி செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் எழுதி முடித்த பிறகு, எத்தனை வினாவுக்கு ஏ, பி, சி, டி என்று விடை அளித்துள்ளனர் போன்ற விவரங்களை தேர்வர்கள் முன்னிலையிலேயே சரிபார்த்து கையெழுத்திடும் முறையும் கொண்டு வரப்பட்டுள்ளது. கருப்பு பேனாவால் மட்டுமே எழுத வேண்டும் என்ற நடைமுறையும் அமல்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
Leave Comments
Post a Comment