20 லட்சம் தேர்வர்கள் - குழப்பும் டிஎன்பிஎஸ்சி!!
கடந்த இரண்டு வருடங்களாக போட்டித் தேர்வுகள் பெரிய அளவில் நடைபெறாத நிலையில் ஏற்கனவே பல தடவை பல நிர்பந்தங்களால் பாடத்திட்டத்தை மாற்றி மாற்றி தான் குழம்பியது மட்டும் அல்லாமல் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருக்கும் மாணவர்களையும் குழப்பிக் கொண்டே இருந்தது தேர்வாணையம். பெரும்பாலான தேர்வர்கள் குருப் இரண்டை தான் தங்கள் கனவை நிஜமாக்கி கொள்ளும் தேர்வாக பார்ப்பார்கள். ரொம்ப உயரமும் வேண்டாம். ரொம்ப தாழ்நிலையும் வேண்டாம் . சொல்லி கொள்ள கூடிய சம்பளமும் அதே நேரத்தில் பதவி உயர்விலாவது பின்னாளில் ஓர் நல்ல பதவியை அடைய முடியும் என்பதால் தான் குருப் இரண்டு தேர்வர்களின் பெரும்பான்மையான இலக்காக உள்ளது.
ஏற்கனவே 2014 ல் குருப் இரண்டில் மெயின் தேர்வு அறிமுகம் செய்து அதை CBT முறையில் நடத்தி கையில் சூடுபட்டு கொண்டது தேர்வாணையம். பிறகு நான்கு வருடங்கள் கழித்தே நேர்முக தேர்வு பதவிகளுக்கான குருப் இரண்டு அறிவிக்கை 2018 ல் வெளியிடப்பட்டு விரிவாக எழுதும் வகையிலான மெயின் தேர்வை 2019 ல் நடத்தி முடித்தது. பிறகு 2019 வாக்கின் இறுதியில் நாங்கள் இனிமேல் பொது அறிவை மட்டுமே முதல்நிலைத் தேர்விலும் அதே நேரத்தில் மெயின் தேர்வில் பொது அறிவை நீக்கி மொழிபெயர்த்தல்,கட்டுரை,திருக்குறள்,தமிழக பண்பாடு போன்ற பகுதியை மட்டுமே சோதித்து தரவரிசை பட்டியல் எடுப்போம் என்று கூறிவிட்டு சுமார் இரண்டு ஆண்டுகள் கழித்து ஆட்சி மாற்றம் கண்டவுடன் மீண்டும் ஒரு புதிய பாடதிட்டத்தை அறிமுகபடுத்தி உள்ளது.
இதன் அழகு என்னவென்றால்.. இது வரை நடத்திய எல்லா பாடதிட்டத்தையும் ஒன்றாக இணைத்து அதாவது மீண்டும் முதல்நிலைத் தேர்வில் பொதுத் தமிழ் அல்லது பொது ஆங்கிலம் + பொது அறிவு மொத்தம் 200 கேள்விகள். மெயின் தேர்வில் மொழிபெயர்த்தல்,தமிழ் மொழி அறிவு,கட்டுரை ,சுருக்கி எழுதுதல் என்பதை தகுதித் தாளாக சேர்த்து மீண்டும் பொது அறிவை சேர்த்து 300 மதிப்பெண்களுக்கு நடத்தி பொது அறிவை மட்டுமே தரவரிசை க்கு எடுத்து கொள்ள போவதாக அறிவித்து இருக்கிறது.
கடந்த ஏழு வருடங்களில் 7000 குழப்பங்கள். ஏன் இப்படி ? பாடத்திட்ட குழுவிற்கு சரியான வழிகாட்டுதலோ அல்லது தேர்வாணையம் எடுக்கும் முடிவுகளில் ஒருங்கிணைப்பு இல்லை என்பது மட்டும் இதன் மூலம் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
குருப் இரண்டு பதவி நிலையில் இவ்வளவு சுமையான ஒரு பாடத்திட்டம் வைப்பது இந்தியாவிலேயே இது தான் முதல் முறை. இந்த பாடத்திட்டத்தை படிக்கும் சுமை என்பது உலகின் மிக கடினமான தேர்வான GAOKAO க்கு இணையான சுமை என்று சொன்னால் கூட அது மிகையாகாது.
இவ்வளவு குழப்பத்துடன் ஒரு தேர்வை நடத்தி முடிப்பதும் சிக்கலாக தான் இருக்கும். நேர விரயம் அதிகம். இதை எல்லாவற்றிற்கும் மேலே இந்த தேர்வுக்கு இவ்வளவு தேவையா என்பது தான் அனைவரின் கேள்வியும்.
எவ்வளவு எளிதாக தேர்வு நடத்தி அரசுப் பணிக்கு தகுதியான விரைவாக ஆட்களை அனுப்பும் உத்தியே சிறந்த முறை. அதை விடுத்து குழப்பத்திலேயே இருந்தால் தேர்வர்களின் நிலை என்னாவது.
தீர்க்கமான தலைமை,காலத்திற்கு ஏற்ற பாடத்திட்டம்,தவறில்லாத கேள்விகள்,விரைவான முடிவுகள்,வழக்குகள் இல்லாத நிலை,வெளிப்படைத்தன்மை இதுவே காலம் காலமாக தேர்வர்கள் எதிர்பார்க்கும் எதிர்பார்ப்பு.
நேர்மையான அதிகாரிகள் தலைமைப் பண்பில் இருக்கும் போது TNPSC மீதான குவியமும் எதிர்பார்ப்பும் ஏராளம் ஏராளம். எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்லாமல் மாற்றத்தை கொண்டு வாருங்கள்.
ஏக்கத்துடன்
தமிழக அரசுப் பணி தேர்வர்கள்
Leave Comments
Post a Comment