திருக்குறள் - பகுதி 1 - பொருள், அணி விளக்கம் !!
1. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று .
பொருள் : ஒரு யானையைக்கொண்டு மற்றொரு யானையைப் பிடிப்பர் . அது போல ஒரு செயலைச் செய்யும்போதே அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடித்துக் கொள்ளல் வேண்டும் .
அணி : உவமை அணி
2. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி .
பொருள் : தான் சமமாக இருந்து தன்னிடம் வைக்கப்படும் பொருள்களின் எடையைத் துலாக்கோல் சரியாகக் காட்டும் . அதுபோல நடுவுநிலைமையுடன் சரியாகச் செயல்படுவதே சான்றோர்க்கு அழகாகும் .
அணி : உவமை அணி .
3. வலியில் நிலைமையான் வல்லுருவம் பெற்றம் புலியின்தோல் போர்த்துமேய்ந் தற்று .
பொருள் : மனத்தை அடக்கும் வல்லமை இல்லாதவர் மேற்கொண்ட வலிய தவக்கோலம் , புலியின் தோலைப் போர்த்திக்கொண்ட பசு பயிரை மேய்ந்ததைப் போன்றது .
அணி : இல்பொருள் உவமை அணி
4. வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர் வைத்தூறு போலக் கெடும் .
பொருள் : பழிவருமுன்னே சிந்தித்து தம்மைக் காத்துக்கொள்ளாதவருடைய வாழ்க்கை , நெருப்பின் அருகில் வைக்கப்பட்ட வைக்கோல்போர் போல அழிந்துவிடும் .
அணி : உவமை அணி .
5. கடல்ஓடா கால்வல் நெடுந்தேர் கடல்ஓடும் நாவாயும் ஓடா நிலத்து ,
பொருள் : வலிமையான சக்கரங்களைக் கொண்ட பெரியதேர் கடலில் ஓட இயலாது . கடலில் ஓடும் கப்பல் தரையில் ஓட இயலாது . அவரவர் தமக்குரிய இடங்களிலேயே சிறப்பாகச் செயல்பட முடியும் .
அணி : பிறிது மொழிதல் அணி .
6. கான முயல்எய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது .
பொருள் : காட்டுமுயலை வீழ்த்திய அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமை தரும் . ( பெரிய முயற்சியே பெருமை தரும் . )
அணி : பிறிதுமொழிதல் அணி
7. நவில்தொறும் நூல்நயம் போலும் பயில்தொறும் பண்புடை யாளர் தொடர்பு .
பொருள் : நல்ல நூல்கள் படிக்கப் படிக்க இன்பம் தருவதுபோலப் பண்புடையவர் நட்பு பழகப் பழக இன்பம் தரும் .
அணி : உவமை அணி
10. பண்பிலான் பெற்ற பெருஞ்செல்வம் நன்பால் கலம்தீமை யால்திரிந்து அற்று ,
பொருள் : தூய்மையற்ற பாத்திரத்தில் வைக்கப்படும் பால் திரிந்துவிடும் . அதுபோல நற்பண்பு இல்லாதவன் பெற்ற பெருஞ்செல்வமும் யாருக்கும் பயனின்றி அழியும் .
அணி : உவமையணி
11. அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை .
தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலம் போலத் தன்னை இகழ்பவரைப் பொறுப்பது தலைசிறந்தது .
அணி - உவமையணி
12. செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாந் தலை
செல்வத்தில் சிறந்தது செவியால் கேட்டறியும் கேள்விச்செல்வம் . அது பிற வழிகளில் வரும் செல்வங்களைவிடத் தலைசிறந்தது .
அணி- சொற்பொருள் பின்வருநிலையணி
13. குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் .
ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் ஆராய்ந்து , அவற்றுள் மிகுதியானதைக் கொண்டு அவரைப்பற்றி முடிவு செய்க .
அணி – சொற்பொருள் பின்வருநிலையணி
14. பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் .
ஒருவரின் பெருமைக்கும் சிறுமைக்கும் அவரது செயல்பாடுகளே ஆராய்ந்து அறியும் உரைகல் ஆகும் .
அணி - ஏகதேச உருவக அணி
15. சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் கலத்துநீர் பெய்திரீஇ யற்று .
தீய செயலால் பொருள் சேர்த்துப் பாதுகாத்தல் சுடாத மண்கலத்தில் நீரூற்றி வைப்பதைப் போன்றது .
அணி - உவமையணி
16. அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொ ( டு ) ஐந்துசால்பு ஊன்றிய தூண் .
பிறரிடம் அன்பும் பழிக்கு நாணுதலும் அனைவரிடமும் இணக்கமும் இரக்கமும் உண்மையும் சான்றாண்மையைத் தாங்கும் தூண்கள் .
அணி - ஏகதேச உருவக அணி
17. ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக் ( கு ) ஆழி எனப்படு வார்
ஊழிக்காலம் வந்தாலும் சான்றாண்மை என்னும் கடலுக்குக் கரை போன்றவர் மாறமாட்டார் .
அணி - ஏகதேச உருவக அணி
19. உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து .
மற்ற தொழில் செய்பவரையும் உழுபவரே தாங்கி நிற்பதால் அவரே உலகத்துக்கு அச்சாணி ஆவர் .
அணி - ஏகதேச உருவக அணி
20. வேலொடு நின்றான் இடுவென் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு
பொருள் : ஆட்சியதிகாரத்தைக் கொண்டுள்ள அரசன் தன் அதிகாரத்தைக் கொண்டு வரிவிதிப்பது , வேல் போன்ற ஆயுதங்களைக் காட்டி வழிப்பறி செய்வதற்கு நிகரானதாகும் .
அணி : உவமையணி
21. பண்என்னாம் பாடற் கியைபின்றேல் ; கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண் .
பொருள் : பாடலோடு பொருந்தவில்லை எனில் இசையால் என்ன பயன் ? அது போலவே இரக்கம் இல்லாவிட்டால் கண்களால் என்ன பயன் ?
அணி : எடுத்துக்காட்டு உவமையணி
22. நச்சப் படாதவன் செல்வம் நடுஉருள் நச்சு மரம்பழுத் தற்று .
பொருள் : பிறருக்கு உதவி செய்யாததால் ஒருவராலும் விரும்பப்படாதவர் பெற்ற செல்வம் . ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றதாகும் .
அணி ; உவமையணி
23.. பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள் .
பொருள் : ஒரு பொருளாக மதிக்கத் தகாதவரையும் மதிப்புடையவராகச் செய்வது செல்வம் . அஃது அல்லாமல் உலகில் சிறந்த பொருள் வேறு இல்லை .
அணி : சொற்பொருள் பின்வருநிலை அணி .
24. குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்தொன் றுண்டாகச் செய்வான் வினை .
பொருள் : தன் கைப்பொருளைக் கொண்டு ஒருவர் ஒரு செயலைச் செய்வது , மலைமேல் பாதுகாப்பாக நின்றுகொண்டு யானைப்போரைக் காண்பது போன்றது .
அணி : உவமை அணி
25. இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின் இன்மையே இன்னா தது .
பொருள் : ஒருவருக்கு வறுமையைப் போன்று துன்பம் தருவது எது என்றால் அது வறுமையே ஆகும் .
அணி : சொற்பொருள்பின்வருநிலை அணி
26. மக்களே போல்வர் கயவர் அவரன்ன ஒப்பாரி யாம்கண்ட தில் ,
பொருள் : கயவர் மக்களைப் போலவே இருப்பர் : கயவர்க்கும் மக்களுக்கும் உள்ள தோற்ற ஒப்புமையை வேறெதிலும் நாம் கண்டதில்லை .
அணி : உவமையணி
27. தேவர் அனையர் கயவர் அவரும்தாம் மேவன செய்தொழுக லான் ,
பொருள் : தேவரும் கயவரும் ஒரு தன்மையர் ; எவ்வாறு எனில் தேவர்களைப் போலக் கயவர்களும் தாம் விரும்புவனவற்றைச் செய்து ஒழுகுவர் .
அணி : வஞ்சப் புகழ்ச்சி அணி
Leave Comments
Post a Comment