அடிப்படைக் கடமைகள்!
அடிப்படைக் கடமைகள்
இந்திய அரசமைப்பு பாகம் 4அ அடிப்படைக் கடமைகளை வரையறை செய்கிறது (51அ). இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் கடமைகள் கீழ்க்கண்டவாறு கொடுக்கப்பட்டுள்ளன.
அ) அரசமைப்பிற்கு கீழ்ப்படிந்து அதன் மாண்புகள், நிறுவனங்கள், தேசியக் கொடி, தேசிய கீதம் ஆகியனவற்றிற்கு மரியாதை அளிக்க வேண்டும்.
ஆ) நமது நாட்டு விடுதலைக்கான போராட்டத்தின் போது பின்பற்றப்பட்ட உன்னதமான மாண்புகளை ஏற்று பின்பற்ற வேண்டும்.
இ) இந்தியாவில் இறையாண்மை, ஒற்றுமை, ஒருமைப்பாடு ஆகியனவற்றைப் பாதுகாத்து போற்ற வேண்டும்.
ஈ) தேவையான காலங்களில் அழைப்பு விடுக்கப்படும்போது நாட்டைப் பாதுகாக்கவும் நாட்டுக்கு சேவைபுரியவும் முன்வர வேண்டும்.
உ) மத, மொழி, சாதி வேறுபாடுகளை கடந்து மக்களிடையே ஒருமைப்பாட்டினையும் உலகளாவிய சகோதரத்துவத்தினையும் உருவாக்க வேண்டும்; பெண்களின் மாண்பிற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.
ஊ) நமது பன்மைத்துவப் பண்பாட்டின் வளமான மரபினை மதித்துப் பாதுகாக்க வேண்டும்.
எ) வனங்கள், ஏரிகள், ஆறுகள், வன உயிரினங்கள் உள்ளிட்ட நமது இயற்கை வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தி அனைத்து உயிரினங்களும் வாழத் தகுந்ததாக பராமரிக்க வேண்டும்.
ஏ) அறிவியல் ஆர்வம், மனிதநேயம், தேடல் நெறி, சீர்த்திருத்தம் ஆகியனவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
ஐ) பொதுச் சொத்துகளை சேதப்படுத்தாமல் மற்றும் பாதுகாக்கவும் வேண்டும்.
ஒ) நமது முயற்சிகள் மற்றும் சாதனைகளை மென்மேலும் உயர்ந்த இலக்குகளை நோக்கி எடுத்துச் சென்று நாட்டினை மென்மேலும் தொடர்ந்து உயர்த்தும் வண்ணம் தனிநபர் மற்றும் கூட்டு செயல்பாடுகளில் சிறப்புத்திறன் பெற்றுத் முன்னேற வேண்டும்.
ஓ) ஆறு வயது முதல் பதினான்கு வயதுக்குட்பட்ட சிறார்கள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அச்சிறார்களின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் வழங்க வேண்டும்.
அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள்
* இந்திய அரசமைப்பின் தனித்தன்மை வாய்ந்த கூறுகளில் ஒன்று அரசு கொள்கை வழிகாட்டு நெறிகள் என்ற பகுதி ஆகும்.
* இதனை இந்தியாவில் சமூக, பொருளாதார நீதியை நிலைநாட்டும் வண்ணம் அரசு அவற்றை அமலாக்கம் செய்வதற்கான வழிகாட்டு நெறிகள் எனலாம்.
* ஆணுக்கும் பெண்ணுக்கும் சம ஊதியம், இலவச கட்டாய அடிப்படைக் கல்வி, வேலை பார்க்கும் உரிமை ஆகியவற்றுக்கான குறிப்பிடத்தக்க விதிகளை அது கொண்டுள்ளது. இந்திய அரசமைப்பின் பாகம் IV-ன் கீழ் முதுமை, வேலையின்மை, நோய்வாய்படுதல், உடல் வலிமை கொண்டோர் வாழ்வாதாரத்திற்குத் தேவையான திட்டங்கள், பொருளாதாரரீதியாக பிற்படுத்தப்பட்ட பிரிவு மக்களுக்கு சிறப்பு முன்னுரிமை, வளங்கள் பகிர்வில் உள்ளபாகுபாடுகள் போன்றவற்றிற்கு அரசு உதவிகள் வழங்குவதற்கான பிரிவுகள் கூறப்பட்டுள்ளன. இவ்வாறு அரசு கொள்கை வழிகாட்டு நெறிகளில் வழங்கப்பட்டுள்ள விதிகள் நீதிமன்றங்கள் மூலமாக நிலைநாட்டப்பட முடியாது என்றாலும் நாட்டின் அரசாட்சிக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன.
Leave Comments
Post a Comment