சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக உத்தரபிரதேச பெண் கைதிக்கு தூக்கு!!
ஏழு பேரை கோடாரியால் வெட்டி கொன்ற வழக்கு : சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக உத்தரபிரதேச பெண் கைதிக்கு தூக்கு!!
மதுராவில் 7 பேரை கோடாரியால் வெட்டிக் கொன்ற வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பெண் கைதியை தூக்கிலிட சிறையில் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மதுரா அடுத்த அம்ரோஹாவில் வசிக்கும் ஷப்னம் என்பவர் தனது காதலனுடன் சேர்ந்து, தனது குடும்ப உறுப்பினர்கள் ஏழு பேரை கோடாரியால் வெட்டி கொடூரமாகக் கொன்றார். இந்த வழக்கில், ஷப்னமினுக்கு விசாரணை நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பளித்தது. இதனை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. அவரது கருணை மனுவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தும் நிராகரித்துள்ளார். இந்நிலையில், மதுராவில் உள்ள பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஷப்னமிற்கு, எப்போது தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்பது குறித்த தேதி உறுதிசெய்யப்படவில்லை.
ஆனால், மதுரா அடுத்த ஹேங்கவுட்டில் உள்ள சிறையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அதனால், தூக்கை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்லி நிர்பயா வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 4 பேரின் தூக்கை நிறைவேற்றிய மீரட்டைச் சேர்ந்த பவன் ஜல்லத் என்பவர் ஹேங்கவுட் சிறைக்கு இரண்டு முறை சென்று ஆய்வு செய்துள்ளார். அதனால், விரைவில் ஷப்னம் தூக்கிலிடப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், மதுரா சிறையில் 150 ஆண்டுகளுக்கு முன்பு பெண் ஒருவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால் சுதந்திரம் பெற்ற பின்னர் இதுவரை எந்த பெண்ணும் தூக்கிலிடப்படவில்லை. இதுகுறித்து சிறைச்சாலை கண்காணிப்பாளர் ஷைலேந்திர குமார் மைத்ரேயா கூறுகையில், ‘ஷப்னம் தூக்கிலிடப்படும் தேதி இன்னும் நிர்ணயம் செய்யவில்லை. ஆனால் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறோம். மரண தண்டனை நிறைவேற்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுடன் ஷப்னம் தூக்கிலிடப்படுவார்’ என்றார்.
Leave Comments
Post a Comment