Ads Right Header

தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை - விரிவான விளக்கம்.

 


தமிழக அரசின் புதிய தொழில் கொள்கை- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு தொழில் கொள்கை 2021 மற்றும் தமிழ்நாடு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கொள்கை 2021 வெளியிட்டார்.


28,053 கோடி ரூபாய் முதலீட்டில் 28 புதிய தொழில் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடல், 10 புதிய தொழில் பூங்காக்கள் மற்றும் தொழிற்பேட்டைகள் அடிக்கல் நாட்டுதல் மற்றும் 3,489 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள் துவக்கம் என மொத்தம் 46 திட்டப் பணிகளை 33,465 கோடி ரூபாய் முதலீட்டில் 2,19,714 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் மாபெரும் விழா முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஓட்டல் லீலா பேலசில் தொழில் துறை சார்பில் நடைபெற்றது.


இந்த விழாவில், கீழ்க்கண்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன:


தமிழ்நாட்டில் வரும் ஆண்டுகளில் தொழில் வளர்ச்சிக்கு மேலும் உத்வேகம் அளிக்க புதிய தொழில் கொள்கை 2021 வெளியிடப்பட்டது. அடுத்த 4 ஆண்டுகளில், 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும், உற்பத்தித் துறையில் ஆண்டுக்கு 15 சதவிகிதம் வளர்ச்சியை அடைந்திடவும், 2030-ம் ஆண்டுக்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் உற்பத்தித் துறையின் பங்களிப்பை 30 சதவிகிதமாக உயர்த்திடவும் இலக்கு நிர்ணயித்து, புதிய வெற்றிப் பயணத்தினை துவக்கி வைத்து, இந்த புதிய தொழிற் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.


குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறையினைச் சேர்ந்த குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டது. வளர்ச்சியை பரவலாக்கிடவும், சோதனைகளை சாதனையாக்கும் திறமை நிறைந்த குறு, சிறு மற்றும் 2 நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மேலும் ஊக்குவிக்கவும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் துறையில் 2 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்து 20 லட்சம் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கிடவும் இலக்கு நிர்ணயித்து குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான தொழில் கொள்கை வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், 28,053 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 68,775 நபர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில், 28 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த முதலீடுகள், மின் வாகனங்கள், காற்றாலை எரிசக்தி, மோட்டார் வாகன உதிரிபாகங்கள், நகர எரிவாயு விநியோகம், ஜவுளி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இவை தவிர தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் மற்றும் இங்கிலாந்து- இந்தியா வணிக சபை இடையே ஒரு நிறுவன புரிந்துணர்வு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.


மேலும், முதல்-அமைச்சர் 3,377 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 7139 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கும் 8 நிறுவனங்களின் தொழில் திட்டங்களை துவக்கி வைத்தார்.


சிப்காட் நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினையொட்டி தபால் தலை வெளியிடப்பட்டது.


15 மாவட்டங்களில், ஏறத்தாழ 34000 ஏக்கர் நிலப்பரப்பளவில் பரந்து விரிந்து, 6 சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் உள்ளிட்ட 23 தொழில் பூங்காக்களை உருவாக்கிச் சாதனை புரிந்துள்ளது.


சிப்காட் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் மற்றும் ஓசூர் ஆகிய இடங்களில் உள்ள தொழிற் பூங்காக்களில் தொழில் புத்தாக்க மையங்கள் துவக்கி வைக்கப்பட்டது. ஒவ்வொரு புத்தாக்க மையமும், 20 கோடி ரூபாய் திட்ட செலவில், பொருத்தமான தொழில்நுட்ப பங்குரிமையாளருடன் வடிவமைத்து, பராமரிக்கக் கருதப்பட்டு வருகிறது.


சிப்காட் நிறுவனத்தின் மணப்பாறை (1077.04 ஏக்கர் நிலப்பரப்பு, 500 கோடி ரூபாய் முதலீடு), மாநல்லூர் (691.587 ஏக்கர் நிலப்பரப்பு, 250 கோடி ரூபாய் முதலீடு), ஒரகடம் (476.12 ஏக்கர் நிலப்பரப்பு, 375 கோடி ரூபாய் முதலீடு) மற்றும் தர்மபுரி (1733.40 ஏக்கர் நிலப்பரப்பு, 480 கோடி ரூபாய் முதலீடு) ஆகிய இடங்களில், 4 புதிய தொழிற்பேட்டைகள் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது.


இதன் மூலம், ஆட்டோ உதிரி பாகங்கள், உணவு பதனிடுதல், மின்சார வாகன உற்பத்தி, தானி யங்கி ஊர்திகளுக்கான உதிரிபாகங்கள், பொது பொறியியல் தொழில்கள் மற்றும் துணி உற்பத்தி ஆகிய சேவைகளுக்கான தொழில் திட்டங்களுக்கு தேவையான சேவைகளை வழங்கிடும். மேலும் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலை வாய்ப்பினையும் உருவாக்கித் தரும்.


அடுத்த கட்ட முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும் வகையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில், 10 ஏக்கர் பரப்பளவில், 2.29 லட்சம் சதுர அடியில், 74 அடி உயரத்திற்கு, ஒரு புத்தம் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. இது, இந்த மாவட்டத்திலேயே உயரமான கட்டிடமாக 13 தளங்கள் + நிலத்தளம் என்ற வகையிலும், உயிரியல் தொழில் நுட்பம், மருத்துவ தொழில் நுட்பம், தகவல் தொழில் நுட்பம் மற்றும் நுண் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் செயல்படும் துறைகளுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் செயல்பாட்டு வசதிகளை வழங்கும் வகையிலும் அமைக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாடு சிட்கோ நிறுவனத்தின் 6 புதிய தொழிற்பேட்டைகள் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 280 ஏக்கர் பரப்பில் செங்கல்பட்டு மாவட்டம், ஆலத்தூர், சேலம் மாவட்டம், பெரிய சீரகப்பாடி மற்றும் உமையாள்புரம், புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி, திருவண்ணாமலை மாவட்டம் பெரிய கோலப்பாடி மற்றும் நாமக்கல் மாவட்டம், இராசம்பாளையம் ஆகிய இடங்களில் உருவாக்க அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 13,300 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.


கிண்டி மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டைகளில் 250 தொழிற்கூடங்களுடன் கூடிய அடுக்குமாடி தொழிற் கூட தொகுப்பு கட்டிடங்கள் கட்ட 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் மூலம் சுமார் 3500 நபர்கள் வேலைவாய்ப்பினை பெறுவர்.


இரண்டு புதிய தனியார் தொழிற்பேட்டைகள் கோயம்புத்தூர் மாவட்டம், கல்லப்பாளையம் மற்றும் மதுரை மாவட்டம், மேலவளைவு ஆகிய இடங்களில் 17 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது.


இதன் மூலம் சுமார் 8400 நபர்கள் தங்களது வாழ்வாதாரத்திற்கான வேலை வாய்ப்பினை பெறுவர்.


இரண்டு பொது உற்பத்தி கட்டமைப்பு மையங்கள் திருப்பூர் மாவட்டம், கவுண் டம்பாளையத்தில் அட்டை பெட்டி தயாரிப்பு குழுமம் மற்றும் சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் வெள்ளி கொலுசு தயாரிப்பு குழுமங்களுக்கு மொத்தம் 4.25 கோடி ரூபாய் மாநில அரசு மானியத்துடன் 6.5 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்டு துவக்கி வைக்கப்பட்டன.


இவற்றின் மூலம் குறுந்தொழில் நிறுவனங்கள் 4000 நபர்களுக்கு வேலை வாய்ப்பளித்து ஆண்டுக்கு சுமார் 350 கோடி ரூபாய் விற்று முதல் ஈட்டுவர்.


மேலும், இரண்டு புதிய பொது பயன்பாட்டு கட்டிடங்கள் 2.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் மற்றும் தர்மபுரி மாவட்டம், ஈச்சம்பாடி தொழிற்பேட்டைகளில் திறந்து வைக்கப்பட்டன.


சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களில் வர்த்தக ஊக்குவிப்பு மையங்கள் 15 கோடி ரூபாய் மாநில அரசின் நிதி உதவியுடன் மொத்தம் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைத்திட மாவட்ட தொழிற்சங்கங்களுக்கு 17.43 ஏக்கர் நிலம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியால் வழங்கப்பட்டது.


சிட்கோ நிறுவனத்தின் பொன்விழா ஆண்டினையொட்டி, சிட்கோ நிறுவனத்தின் இலச்சினை (லோகோ) மற்றும் பொன்விழா இலச்சினை ஆகியவை வெளியிடப்பட்டது. மேலும், சிட்கோ நிறுவனத்தின் பொன்விழா ஆண்டின் நினைவாக 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கிண்டி தொழிற்பேட்டையில் பொன்விழா வளைவு அமைக்கப்படும்.


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 1811.92 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பிலான ஈரோடு மாவட்டம் நொய்யல் கயிறு குழுமம் உள்ளிட்ட இரு கயிறு உற்பத்திக் குழுமங்களை துவக்கி வைத்துள்ளார்.


இக்குழுமங்கள் புவி சார்ந்த (நார்) ஜவுளிகள், கயிறு (நார்) கட்டிகள் மற்றும் மிதியடிகள் உற்பத்தியில் ஈடுபட்டு 600 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பும், 1500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பும் அளிக்கும்.


குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வணிகம் மற்றும் முதலீட்டு மேம்பாட்டு அமைப்புக்கான இலச்சினை மற்றும் வலைத்தளம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.


குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையில் சிறந்த தொழில் முனைவோர், சிறந்த தரம் மற்றும் ஏற்றுமதி தொழில் முனைவோர், சிறந்த மகளிர் தொழில் முனைவோர், சிறந்த வேளாண் சார்ந்த தொழில் முனைவோர் ஆகிய பிரிவுகளில், சிறப் பாக செயல்படும் நிறுவனங் களுக்கும் மேலும் இத்துறைக்கு அதிக அளவில் கடன் வழங்கிய வங்கிகளுக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகள் வழங்கி கவுரவித்தார்.


பிசினஸ் டுடே நிறுவனம் மற்றும் தமிழ்நாடு அரசு தேர்வு செய்த 11 தொழில் நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.


இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Previous article
Next article

Leave Comments

Post a Comment

Ads Post 4

DEMOS BUY