சிவில்ஸ் என்றொரு அற்புத உலகம்! பதிவு: 03.08.2020 - இளம்பகவத்.!
#அப்பிரேவியேஷன்_அலப்பறைகள்
நினைவில் நிறுத்த முடியாத பல்வேறு தகவல்களை வரிசைப்படுத்தி நினைவில் வைத்துக்கொள்ள நிமோனிக்ஸ் ( mnemonics ) என்ற உத்தி பயன்படும். இதில் பல்வேறு வகைகள் உள்ளன. முதல் எழுத்துக்களை சுருக்கி அப்பிரேவியேஷன் தயார்செய்து நினைவில் வைத்துக் கொள்வது ஒரு வகை. இன்றும் நினைவிலிருந்து எடுப்பதற்கு அந்த அப்பிரேவியேஷன்கள் பயன்படுகின்றன. உதாரணமாக, Article 15 : RRCSP, Article 16: RRCSPDR. இதை எங்களுக்கு உருவாக்கித் தந்தவர் பிரபாகரன் சார். இது என்ன என்று இந்திய அரசியலமைப்பு படிப்பவருக்கு புரியும். புரியாதவர்கள் மீண்டும் ஒருமுறை பாலிட்டி படிக்கவும். இதுபோன்று அப்பிரேவியேஷன் ஆக இல்லாமல் ஒரு கதை மாதிரி தொடர்பில்லாத விவரங்களை நினைவு வைத்துக் கொள்ளுதல் மற்றொரு வகை. இந்தியவின் 6 தத்துவ தரிசனங்களையும் அதை தோற்றுவித்த தத்துவ ஆசிரியர்களையும் நினைவு வைத்துக் கொள்வதற்கு எங்களுக்கு வரலாறு வகுப்பெடுத்த திரு.ரஞ்சித் அவர்கள், கபிலும், மோங்கியாவும் பிரெண்ட்... என்று ஒரு கதையைச் சொல்வார். தற்பொழுது இவர் குஜராத்தில் மூத்த ஐஏஎஸ் அலுவலராக பணிபுரிகிறார். ஆறு தத்துவ தரிசனங்களும் அதனைத் தோற்றுவித்த வாயில் நுழையாத பெயர்களையும் வரிசையாக ஞாபகம் வைத்துக் கொள்வதற்கு இந்தக்கதை உதவி புரியும். நான் இந்த மாதிரி கதைகளை வைத்து பல பிரிலிம்ஸ்களை ஓட்டி இருக்கிறேன்! நல்லவேளை இந்த நிமோனிக்ஸ் உருவாக்கியவர்கள் யாரும் காப்பிரைட் எதுவும் வாங்கவில்லை! அப்பிரேவியேஷன் ஒரு அளவுக்கு மீறினால் அமுதமும் நஞ்சாகிவிடும்! எதற்கு என்ன அப்பிரேவியேஷன் போட்டோம் என்று தெரியாமல் குழப்பமாகி, அதற்கு ஒரு அப்பிரிவியேஷன் போட வேண்டும்! எனவே, அளவோடு அப்பிரிவியேஷன் போட்டு வளமோடு வாழ்க!
#அண்டர்லைன்_அட்ராசிட்டி
புத்தகத்தை குறிப்பெடுத்து படிக்கும் பழக்கம் நல்லது. ஆனால், குறிப்பு எடுப்பது அவ்வளவு எளிதா என்ன? எனவே, சிலர் 'கறை நல்லது' என்பதுபோல புத்தகத்தில் அண்டர் லைன் கோடுகளைப் போடுவார்கள். முதல் முறை படிக்கும் பொழுது சிவப்பு கலரிலும், அடுத்த முறை படிக்கும் பொழுது பச்சை கலரிலும், அப்புறம் படிக்கும்பொழுது ஆரஞ்சு கலரிலும், பல வண்ணங்களில் ரங்கோலிகளைப் போட்டு புத்தகத்தை மாடர்ன் ஆர்ட் மாதிரி மாற்றி விடுவார்கள்! அப்புறம் ரேடியன் கலரில் பட்டையாக பெயிண்ட் அடிக்கும் ஹைலைட்டர்களை வாங்கி அடிக்க தொடங்குவார்கள்! வெள்ளை புத்தகம் ரெயின்போ காலனி மாதிரி ஆகிவிடும்! இந்த மாதிரி பட்டை தீட்டி அறிவை வளர்த்த ஆத்மாக்களின் நானும் ஒருவன்! எனது புத்தகங்களை ஆர்வத்துடன் படிக்க கேட்ட சில மாணவர்கள் இரண்டாவது நாளே கொண்டு வந்து கொடுத்துவிட்டு பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவார்கள்! குறிப்பு எடுத்து படித்தல் மிகவு நல்லது. பெயிண்ட் அடித்து படித்தலும் நல்லதுதான்! உங்கள் சொந்த புத்தகத்தில் நீங்கள் பெயிண்டும் அடிக்கலாம்! நூலக புத்தகத்தில் ஒருபோதும் வேண்டாம்!
#டவுடிங்_தாமஸ்
சீரியசாக படித்துக்கொண்டிருக்கும்போது சில நபர்கள் அதைவிட சீரியஸாக வந்து ஒரு டவுட் கேட்பார்கள். நாம் அந்த பகுதியை கரைத்துக் குடித்து இருக்கிறோம் என்ற நம்பிக்கையில் இருப்போம். ஆனால் அந்த நபர் கேட்ட ஒற்றைக் கேள்வியில் மொத்த நம்பிக்கையும் சுக்குநூறாய் விடும்! அந்த சந்தேகத்தை தீர்ப்பதற்கு புத்தகத்தை எடுத்து மொத்தமாக மீண்டும் கரைக்க வேண்டும்! அடுத்த நாள் அதே நபர் மற்றொரு சீரியஸ் டவுட்டுடன் வருவார். நாம் அத்தோடு அவுட்! இதுபோன்ற நண்பர்கள் உண்மையில் சந்தேகங்கள் கேட்கிறார்களா இல்லை நமக்காக வேண்டி கிளம்பி வருகிறார்களா என்று கண்டுபிடிப்பது சற்று நாட்கள் ஆகும். உண்மையிலேயே சந்தேகம் கேட்கும் எனது அன்பு நண்பர் சீனிவாசன், மிகுந்த அக்கறையோடு அந்த பதில்களைக் குறித்துக் கொள்வார்! ஆனால், என்ன அடுத்த நாளும் அதே கேள்வியைக் கேட்பார்! நானும் ஒரு இஞ்சி டீ குடித்துக் கொண்டே அவருக்கு மீண்டும் சொல்லுவேன்! அவர் கேட்ட சந்தேகம் தேர்வில் வினாவாக வரும்பொழுது 'வாழ்க சீனிவாசன்!' என்று டிக் அடித்து முடிப்பேன். அடுத்தநாள் ஆர்வத்தோடு சீனிவாசனை பார்த்து "என்ன சீனி நீங்க கேட்ட கேள்வி வந்தது, அடிச்சிட்டீங்களா?" என்றால் என்ன தலைவரே "இதுக்கு ஆன்சர் நான் வேறல்ல போட்டேன்" என்று கண்ணாடியை கழட்டி துடைத்துக்கொண்டே மீண்டும் சீரியஸாக கேட்பார்! மீண்டும் ஒரு இஞ்சி டீயை நோக்கி பயணிப்போம்! இவர்போல் இல்லாமல் வேண்டுமென்றே கோக்குமாக்கு சந்தேகங்களை கேட்கும் நபர்களிடமிருந்து பத்து மீட்டர் இடைவெளி விட்டு இருப்பது நல்லது!
#சிடுமூஞ்சி_சிங்காரம்
சிலர் தேர்வு நெருங்க நெருங்க ஹாலிவுட் படங்களில் வரும் டிராகுலா மாதிரி பார்வையிலேயே ரத்தத்தை உறிஞ்சி விடுவார்கள். இவர்களை நெருங்குவதற்கு மிகுந்த மன தைரியம் வேண்டும். ஒரு நண்பர் மெயின் தேர்வு நடந்துகொண்டிருந்த மதிய உணவு இடைவேளையில் தான் எடுத்து வந்திருந்த குறிப்புகளை ஒவ்வொன்றாக எடுத்து கசக்கி குப்பையில் வீசிக்கொண்டிருந்தார். என்னங்க ஆச்சு என்று எட்டி இருந்து கேட்டேன். எதுவுமே வரல, என்ன எழவுக்கு இத தூக்கி சுமக்கனும் என்று கசப்புடன் மொத்தத்தையும் தூக்கி எறிந்து விட்டார். அவ்வளவு வெறுப்பு, விரக்தி! போட்டித்தேர்வுகள் என்பது ஒரு விளையாட்டுக் களம் இதில் வெற்றியும் தோல்வியும் இயல்பு. இதில் ஏற்படும் கசப்புகளை விழுங்கி கடந்து செல்வதே நல்லது. அவ்வளவு சீரியசாக இருந்து நாம் என்ன செய்யப் போகிறோம். ரிலாக்சாக இருந்தால் அடுத்த தேர்வையாவது நன்றாக எழுதலாம். அடுத்தவருடன் ஒரு புன்னகை புரிந்து பேசுவது உங்களது மனத்தினை லேசாக்கும். சிவில் சர்வீசஸ் உடன் உலகம் முடிந்து விடவில்லை என்பதை நினைவில் கொள்க.
#ஜெராக்ஸ்_ஜென்டில்மேன்கள்
சிவில் சர்வீசஸ் புத்தகங்களை வாங்க காசில்லாத காலத்தில் புத்தகங்களை ஜெராக்ஸ் போட்டு படிக்கும் சிக்கனத்தை கடைபிடித்தேன். எனது பெரும்பாலான நூல்கள் ஜெராக்ஸ்தான். நண்பர் முத்தமிழ் என்னை ஒரு ஜெராக்ஸ் அரக்கன் என்பார்! எனது ஜெராக்ஸ் புத்தகங்களைப் பார்த்து கெட்டுப்போன நண்பர்கள் பலர். அவர்களும் இந்த காஸ்ட்- பெனிஃபிட் அனலைசிஸ் செய்து ஜெராக்ஸ் செய்யத் தொடங்கினர். ஒருமுறை முத்தமிழிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது "இப்படி ஜெராக்ஸ் செய்வது அந்த நூலாசிரியருக்கும், பதிப்பகத்துக்கும் செய்யும் துரோகம் அல்லவா" என்று அற உணர்வு மேலோங்க பேசினோம். "இல்ல தல, நம்மால் வாங்க முடியாத காசில் இவர்கள் புத்தகம் போட்டால் இப்படித்தான் ஆகும். நமக்கு வேலை கிடைத்து பணம் வந்த பிறகு இதே புத்தகத்தை காசு கொடுத்து வாங்கி இவர்களின் கடனைத் தீர்க்கலாம்" என்று ஒரு முடிவுக்கு வந்தேன். நான் வேலை கிடைத்த பிறகு ஜெராக்ஸ் போடுவதை நிறுத்தி விட்டேன். ஜெராக்ஸ் போட்ட புத்தகங்களின் ஒரு காப்பியை வாங்கி கடனையும் தீர்த்து விட்டேன்! நண்பர் முத்தமிழ் தனது கடனைத் தீர்த்த தோடு இல்லாமல், மேலும் 10 ஆயிரம் புத்தகங்களை கொண்ட ஒரு நூலகத்தையும் உருவாக்கிவிட்டார்! Muthtamil Angamuthu
அற்புத உலகத்தில் மேலும் பயணிப்போம்.
Previous article
Next article
Leave Comments
Post a Comment